Tuesday, May 22, 2012

முள்ளிவாய்க்கால் நினைவுகள்


சொல்லாமல் முடியாது
சொல்லி அழுதாலும் தீராது
எங்கள் மண் இழந்த சோகம்
எங்கள் மண் எங்கும் இப்போது
அன்னிய காலடிக்குள் அவதியுற்று
நித்தம் நித்தம் அனல் நடுவே
பூ போல கருகி கிடக்கிறது.
முள்ளிவாய்க்கால் என்பது
ஒரு காலப் பெரு வலி
எம் வாழ்வு நீளம் வரைக்கும்
எம் நெஞ்சை குத்தி குதறும்
ஊழிப் பெருவலி அது..........
நெஞ்சு நிறைந்து கனக்கிறது
இறுதி கணங்களில் உறவுகள்
எழுப்பிய மரண ஓலங்கள்
காப்பாற்ற யாருமே இல்லையா? என்ற
கதறலே இன்னும் காதுகளுக்குள்
மீள மீள வந்து இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் நினைவில் இன்று
என்ன சொல்ல போகின்றோம்
கை கூப்பி வணங்குவோம்
சிறு அகல் விளக்கெடுத்து
ஏற்றி வணங்கிடுவோம்.......
பிறகு வரிசையில் நின்று
மலர் எடுத்து தூவிடுவோம்
இவ்வளவும் தானா?
இது போதாது
எரிக்கின்ற நினைவேந்தி
எழுந்திட வேண்டும்.
வன்னிப் பரப்பெங்கும் எங்கள்
மூத்த தலைமுறை ஒன்றின்
பண்டாரப்பெரு வன்னியன் காலடி
படிந்து கிடக்கும் நிலம்
யாருடைய ஆளுகைக்கும் கீழே
அடங்காது என சொல்லி எழுவோம்......
வற்றாத வாய்க்கால்களும்
வாவிகளும் குளங்களும்
எப்போதும் பூத்துக் குலுங்கி
பழம் நிறைந்து நிற்கும் மரங்களும்
முற்றிய பயிர்கள் நிலம்தொட்டு
அறுவடைக்கு தயாராக நிற்குமே
அந்த வன்னி இப்போது
எல்லாவற்றிற்கும் யாரிடமோ
எப்போதும் கையேந்தி நிற்கும்
பொழுது முள்ளிவாய்க்காலுக்கு பிறகு
எங்கள் வயல்கள் எல்லாம்
எங்கள் நிலமெங்கும் மீண்டும்
அந்த அர்த்த ராத்திரியிலும்
தடுக்க யாருமோ
அதட்டி நிறுத்த எவருமோ இன்றி
நாம் உலாவும் நாள் எப்போது வரும்........

No comments:

Post a Comment