Wednesday, May 30, 2012

நட்பு அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்...


காதல் தான் உன்னதமானது
என்று எண்ணிவிடாதே
அதைவிட மேலானது நட்பு
காதல் ஒருநாள்
உன்னை கைவிடகூடும்
ஆனால் உண்மையான நட்பு
உன்னை துயரதில் கூட கைவிடாது
காதல் உன்னை எதிர்பார்க்கிறது
உன்னை தனக்கே சொந்தமென
எண்ணவைக்கிறது
நட்பு உன் அன்பை மட்டும்தான்
எதிர்பார்க்கிறது.
உன் கண்ணீரை துடைக்க
உன் கைகள் உயரும் முன்னரே
நட்பின் கை உன் கண்ணீரைத்
துடைத்துவிடும்
உன்மையான நண்பர்கள்
யார் என்று தெரிந்து நட்பாய் இருந்தால்
உன் இறுதிக் காலம் வரை கூடவே வரும்
அதுதான் தூய்மையான நட்பு........

நிழலும் நிஐமாகும்


நிஐத்தை நம்பி
நிழலை வெறுக்கிறாயன்பே
நீ நம்பிய நிஐம் இன்று மட்டும்தான்
நாளை சற்றுத்திரும்பிப்பார்
நீ வெறுத்த நிழல்
அன்றுதான் நிஐம் எண்று உணர்வாய்
என்றும் உனக்காக
நீ பொய்யென நினைத்த அந்த நிழல்
உன்பார்வையில் பொய்யாக
நிஐமாக உன்கூடவே வரும்
இருவரும் சாகும் வரை......

கண்ணீர்


அன்பே!
உன் கண்களில் பிறந்து
உன் கன்னத்தில் தவழ்ந்து
உன் உதடுகளில் மரிக்கும்
உன் கண்ணீராய் நான்
ஆனால்...
நான் உவர்க்க மாட்டேன்
மாறாக இனிப்பேன்.
காரணம் வாழ்வது
சில நொடியாக இருந்தாலும்
அது உனக்காக இருக்க வேண்டும்
அதுவும் உன்னோடு இருக்க வேண்டும்.

கலைந்து போன காதல்



உன் பார்வையினில்
புரிந்து கொண்டேனடி
நீ என்னை காதலிக்கின்றாய் என்று
ஆனாலும்
ஏற்க மனம் தயங்குகிறதடி
என் குடும்பத்தின்
கனவுகள் கலைந்து விடுமோ
நான் காதல் கொண்டால் என்று?
என் குடும்பத்தின் கனவுகள் முன்
என் காதல் கனவுகள் ஒன்றும்
பெரிதாகத் தோன்றவில்லை
கலைத்துவிட்டேனடி
என் காதல் கனவுகளை
குடும்பத்தின் கனவுகளிற்காய்...

செய்த பாவன் தீர்த்திடத்தான்...!


மண்ணை  உருட்டி உலகைச்செய்த...
எங்களது இறைவா...!
தமிழ் இனத்தை -  இங்கிருந்து
உருட்டி விடல்...
அது உனக்குச் சரியா..?
விடிவிற்காக போரிட்டதே...
எங்களது இனம்,
விடியும் போது இருட்டவிட்டாய்...
எந்தளவு நியாயம்...?

மறுபிறப்பு தத்துவத்தை...
சொல்லிவைத்த நீயே...!
மறுபடியும் - எம்மை 
பிறக்க வைக்க வேண்டாமையா..! இறைவா...
இழவு வீடா...  மாற்றிவிட்டாய்...
எங்களது நாட்டை...
ஏன் கொடுத்தாய்...!
எங்களுக்கு இப்படியோர் கேட்டை...?

ஈழ மண்ணை அழிப்பதிலே...
உனக்கு என்ன பெருமை...!
ஏலுமென்றால் சொல்லிவிடு...
எங்களிடம்...பதிலை...!

அழுதழுது வற்றிப்போச்சி...
கண்ணிலுள்ள... நீரு
அழும்போது...
துடைப்பதற்காய்...வந்ததெல்லாம்...?
கறைபடிந்த கையி...!
அழுவதற்கு நீருமில்லை...
எங்களது
கண்ணில்...!அழு(கிறோம்)ம்போது,,,
வரவில்லையே - கல்
நெஞ்சக்கடவுள்
ஒருதடவை - வந்து
இங்கு
நீயும் கொஞ்சம் பாரு...
கடவுளே,,,!
உன்னைக்கொல்லும் - உந்தனது
மனதிலுள்ள நீதி.
உலக நீதி காத்திடத்தான் -  நீயும்
இங்கு வாவேன்..!
செய்த பாவன் தீர்த்திடத்தான்...
தமிழனுக்கு...
நாடு ஒன்றைத்தாவேன்.

Friday, May 25, 2012

மனதை உருக்கும் கடல் கன்னி [விடியோ இணைப்பு]

என் உயிர் உனக்கே சமர்ப்பணம்


என் கவிதைகள்
என்றும் உனக்காக
நீயோ என்றும்
எனக்கே எனக்காக
இதில் இல்லை மாற்றம்
இது புரியாமல் ஏன்
என் மீது கோபம்
உன் நினைவுகளின் நிழல்களில்
என் இருப்பிடம்
உன்னை இழந்த பின்
நானோர் நடைப்பிணம்
இரவுகள் எல்லாம்
என் குருஷோத்திரம்
இதை நீ அறிவதால் பிறக்குமா
என்மேல் கரிசனம்
உனை எண்ணியே உருகுதே
என் உயிர் தினம் தினம்
உறுதியாய் சொல்கிறேன்
இனி என் உயிர்
உனக்கே சமர்ப்பணம்.

என் சுவாசமே ....


எங்கோ இருந்து....
நீ எழுதும்....
வரிகளை நேசிக்கிறேன்.....
உனக்காய்.....
ஒரு உருவம் வரைந்து ....
தினமும் ....
அழகு பார்க்கிறேன்.....
உன்முகம் தெரியாமலே ...
வார்த்தை விளையாட்டில்...
ஏன் வாழ்க்கை.... 
உன் மௌனங்களுக்குள் ....
சிக்கிக்கொண்டதே ....
மீட்டுக்கொடுத்துவிடு ....
உன் மௌனச் சிறைக்குள் ...
எனை ...
ஆயுட்கைதி ஆக்கிவிடாதே....
வலுவிழந்து போன ...
கைகளை பற்றிப்பிடித்து....
எழுத வைத்த நீயே ...
என் கைகளை ...
ஒடித்து விடாதே ....
உன் வரிகளே ...
என் சுவாசம்...
என்று தெரிந்தும் ....
ஏன் எழுத மறுக்கிறது....
உன் பேனா ...
உன் வார்த்தைகள் ....
எனை புண்படுத்திவிடும்...
என்பதற்க்காய் ....
மௌனத்தை நேசிக்கும் நீ ....
இன்னும் புரிந்து கொள்ளவில்லை ......
உன் மௌனங்களால் .....
நான் தினமும் இறந்து கொண்டிருப்பதை.....

உன் மௌனங்களை விட .....
கொடுமையான பதில் ....
உன்னிடம் இருக்காது .....
அதை உனக்காக எழுதாவிடினும் .....
உன் வரிகளை சுவாசிக்கும் ....
ஓர் இதயம்...
உயிர் வாழ்வதற்காய் எழுது.....

நானென்பதும் அவளென்பதும்


என்றும் நீங்காது என் நினைவில்
நிறைந்திருக்கும் அவளே
என் உடலுக்குள்
உலாவிடும் உயிராவாள்.
துயரத்தில் என் கண்கள்
வடிக்கின்ற துளி கண்ணீரை
துடைக்கின்ற இருகரமும்
அவளே தான்.
முழு இன்பத்தில்
நான் சிரிக்கின்ற போதினில்
என் புன்னகைக்குள்
ஒளிர்கின்ற விரிகின்ற பூரிப்பும்
அவளே தான்.
என் இதயத்து
தசைகள் விரிந்தும் சுருங்கியும்
தருகின்ற ராகத்தின் சுருதிலயம்
அவளே தான்.
வீணையின் தந்தி தருகின்ற
நாதத்தில் அதிகாலை பொழுதொன்றில்
மழைதாங்கி மலர்திருக்கும்
அழகான ரோஜாவில்
மலைமூடி நிற்கும் புகையான முகிலில்
முகில்கூடி பொழியும் மாலைமழையில்
நான் பார்க்கும் அனைத்தும்
அவளாக இருக்கும் போதினில்
அவளென்றும் நானென்றும் பிரிவென்பதேது.
அவளுக்குள் கரைந்து
நானும் எனக்குள்ளே உருகி அவளும்
நானென்பதும் அவளென்பதும்
உருவங்கள் மட்டுமே.
உயிராகி ஒன்றுக்குள் ஒன்றானோம்

இனிமை தந்த இரவு இன்று...


இனிமை தந்த இரவு
இன்று வேதனயாக
கனவு தந்த தூக்கம்
இன்று தூக்கம் கலைக்கின்றது
உன் காட்சியே கோலமாய்
இருந்த கண்கள் இன்று
கண்ணீர் கோலமாய்...
தென்றலாய் இருந்த என்
மனம் அன்று உன்னை
மணக்கோலம் கண்ட
நாள் முதலாய் புயலாய்...
உன் திசையை நோக்கி
பயணித்த என் கால்கள்
இன்று மரணத்தை நோக்கி.....

வருவாயா தேடி....


சில்லென்று சிதறும்
மழைத் துளிபோல - உன்
வரவு இனித்த கணங்கள்
நினைவில் எழுந்து - கண்களை
பனிக்க வைக்கிறது.
களங்கமில்லா காதலில்
கனிவான உன் முக
தரிசனம் கூட சுகமானது...
எஞ்சிய வாழ்வில்
மிஞ்சிய உன் நினைவுகள்
வஞ்சி எனை வதைப்பதால்
மீதி நாளெல்லாம்
வேதனை மட்டும் மீதமாய்...
நெடுதுயர்ந்த கம்பீரத்தில்
நெடுநாளாய் நீ என்னுள்
நெருங்கி வர முயாமல்
நொறுங்கி உள்ளம் நிற்கிறது..
நீண்ட நாட்கள் உனைக் கண்டு - மனம்
துண்டாகி அழுகிறேன் இன்று..
உறவுக்காய் உனை இழந்தேன் - என்
மறைவுக்காவது வருவாயா தேடி..!!!!!
உனைக் கண்டு
உயிர் விடவே எனதாசை..
உயிர் தரித்து வருவாயா எனக்காய்...!!!!!

!!! புரிய மறுப்பது ஏன் ? !!!


உடல் இருக்கிறதே
உயிர் எங்கோ
உறவாட ஏங்குதே
உள்ளம்
உண்மைகள் சொன்னதால்
உதறுகிறார்கள் உன்
உறவுகள் நம் காதலை
உடலை மட்டும் நேசித்து இருந்தால்
ஊனமாகி போனாலும்
ஊமையாய் இருந்திருப்பேன்
உரிமையாய்
உன் மீது கொண்ட காதலை
உயிர் என நேசித்து
உறவுகள் சம்மதம் வேண்டி
உள்ளம் அழுகிறதை
உலகே புரிகிறது
உன் உறவுகள்
புரிய மறுப்பதேன் ஏன் ?

இறைவன்


இறைவன் ஜீவனுக்காய் ரட்சித்த உலகை
ஜீவநதிகள் இரட்சித்தது இறைவனை
இறைவன் மனிதனை தெரிந்து கொண்டான்
மனிதன் இறைவனை தேடி
மதங்களை வளர்த்துக்கொண்டான்
எல்லா உயிருக்கும் வயிற்றில் பசி
எல்லா உயிருக்கும் முகத்தில் கண்
எல்லா உயிருக்கும் ஜீவன் ஒன்றே
அந்த ஜீவன் அனைத்திற்கும்
தலைவன் ஒன்றே
அவன்தான் இறைவன்
மதங்கள் என்று முத்திரைகுத்தி
இனங்கள் பிரிந்தது - அதனால்
இறைவன் தொலைந்துபோனான்
மதம் என்பது சாக்கடை
நீ வீழாவரைக்கும் ஞானி
இறைவனை மட்டும் அறிந்துகொள்
உன் நன்மை தீமை அவன் அறிவான்.

தொடராத வீணை


சின்னப்பாலமுனை பாயிஸ்
பூவையின் உச்சி முகர்ந்து
கூந்தல்களைக்  கோரிய
என் விரல்கள்
கோவை இதழ்களையும்
மெதுவாய் கிள்ளிக்கொள்ள
கருகிய காம்பாய்
சுருங்கி உதிர்ந்து
தரையில் படர்ந்தது
வீணையின் வடிவமாய்
தரையை அலங்கரிக்க
என் விரல்கள் துடித்தன
அதனை வாசித்துக்கொள்ள
வீணை மூடிய சீலை
காற்றில் அசைந்தாட
இதயத்தில் மேளதாளம்
ராகம் தொடரும்
இடம் தெரியாமல்
இடைநடுவே
விரல்கள் நடனமாட
சங்கதி நீண்டு கொண்டன
சுதி நழுவாமல்
சுவை ஏறிச்செல்ல
ரகரகமாய் ராகங்கள்
பெருகி வந்தது
பல்லவி சருகாமல்
கீதம் தொடர்ந்து கொள்ள
வீணை முறிந்து கொண்டது
முழுமைபெறாத கானமுமாய்
தொடராத வீணையுமாய்
ராகம் தேடும் ரசிகன்............

நினைவற்றவன்


நினைவுகள் இருந்தும்
நினைவுகளை
தொலைத்தவனாய்
சிதைத்தவனாய்
அந்த நினைவுகள்
என்னுணர்வுகளை
என் உடலிலிருந்து
வேறாக பிரித்தெடுத்து
ஐடமாக்கி நினைவற்றவனாக
என் கண்ணுக்கு தோன்றும்
இந்த பரந்த வெளித்திடலில்
முடிவை தேடுகிறேன்.
தொடர் நிகழ்வுகள் என்னை
தொடராக கலங்கவைத்து
மரத்து போன இந்த வாழ்வை
அழிப்பதற்க்கு நினைவுகள் இருந்தும்
நினைவற்றவனாக திரிகிறேன்
இந்த நினைவற்றவன்.

சில்மிச இரவுகள்


முடிச்சவிழ்ந்த கைலியின் இளகலில்
அவள் உள் நுழையும் கனவினில்
பின் இரவு கரையக் கண்டேன்
உக்கிர கோடையில் வழியும் அவள் வியர்வையில்
கமழும் நறுமண மலர்களின் வாசம்
நாசியின் அடிவரை நுழைந்து
இதயத்தின் இடம் வலம் தொடும்
சொப்பன சுந்தரியின் வனப்புகளில்
தாவித் திரியும் அவாவின் அலைவுகளில்
தொலைத்த வினாடிகளின் தொகுப்பே
எனது வாழ் காலத்தின் கணக்காகிறது
முன் மாலைப் பொழுதின் இரம்மிய அழகை
விழுங்கத் துடிக்கும் சர்ப்பத்தின் நாக்கில்
மேனகையின் மோகமுகம்
என்னைக் காமத்தின் சொர்க்கத்துள் தள்ளி விடுகிறது
சிலிர்த்தடர்ந்த பூஞ்சோலையாய்
அவள் உதிர்த்து விட்டுப்போன புன்னகையில்
மயிலிறகின் வருடல்
உடல் முழுதும் சில்மிச நடனம் புரிகிறது
இரவு கடந்து வெகு நேரமாகியும்
கலையாத அவள் முகம்
என் நினைவுக் குழியினுள்
கனவுகளைத் தேக்கியபடியே
புயல் கடந்துபோன தேகத்தின் அயர்ச்சியில்
மூர்ச்சையாகிக் கிடக்கிறது எனதுடல்.

Tuesday, May 22, 2012

யுத்த வெற்றி என்ற மாயை......!!!!


சத்தமின்றிக் கடந்த
யுத்த நிறைவின் மூன்றாண்டில்
இன்னும் மருந்தின்றிய
தழும்புகளோடு அழுகிறது நாடு
வென்றோம் எங்கள் நாடென்று
குதூகலிக்கும் சாராரும்
இறந்தவர்களுகாய் இரங்கல் செய்வோரும்
இருப்பவர்களின் பிணிதீர்க்க
இம்மியளவும் நினைத்திடவில்லை
மூன்றாண்டு கடந்தும்
முடிவுக்கு வராத சிறைபிடிப்புகளும்
நிறுத்திடாத இனத்துவேசங்களும்
நிர்க்கதியற்ற வாழ்வுகளும்
உண்மையான வெற்றியாகிடுமா??
அழிந்தவர்களின் நாமங்களோடு
அழித்தவர்களைப் பழிதீர்க்க
இருப்பவர்களின் வதை போக்காது
வாய்ப்பேச்சுகளில் யுத்தம் செய்து
ஊனங்களுக்கு உபத்திரம் சேர்ப்பதில்
காணத்துடிப்பதுதான் எதுவோ....!!!
இரு சாராருக்கும் நடுவில்
அப்பாவி உயிர்களங்கு
அல்லல் படுகிறது உணவுக்காய்
ஈழமண்ணோ இலங்கை மண்ணோ
வயிற்றுப் பசிக்காய் அழும்
உயிர்களின் கதறல்கள்
யாருக்குமே கேட்கவில்லையே....!!!
சுற்றுலா எனும் பெயரிலும்
வெற்றி விழா எனும் பெயரிலும்
இரங்கல் விழா எனும் பெயரிலும்
வீணடிக்கும் கிரயங்களை சேர்த்து
ஈழமண்ணின் உயிர்களுக்கு
இரைகளுக்காகக் கொடுத்திடுங்கள்
பிரதேசவாதங்களோ
மதத்துவேசங்களோ அற்று
தன் (மனித)இனத்திற்குச் செய்யும்
உபகாரமாய் நினைத்து
ஓர் உயிருக்கேனும் அபயமளியுங்கள்
அங்கு காண்பீர்கள் பல வெற்றிகளை
தொடரும் துயர்களில்தான்
தளிர்விடுகிறது வெறுப்புகள்
வெறுப்பின் உச்சத்தில்தான்
அழிவின் ஆரம்பம் உதயமாகிறது
ஆளப்பிறந்தவனையும் ஆட்டிவைக்கும்
துயர்களுக்குத் தீர்வு வேண்டாமா........???

காற்றோடு வாழ்கிறேன்


சிரிக்கிறேன் தனிமையிலே
நிஜம்தானோ இதுவென்று
நித்திரையில் வீழ்ந்தபின்னே
வான்வெளியில் நடக்கிறேனே
கற்பனையில் காண்பதெல்லாம்
ஆன்மாவை தேடுதே
குளிரிலும் என்னுடல்
உறையவில்லை பெண்ணே!
மனத்திரையில் மாட்டிவைத்தேன்
விழித்திரையில் கோர்த்து வைத்தேன்
உன் ஆசைகளை சேர்த்து வைத்தேன்
இறுதியிலே உன்னிடத்திலென்
காதலைத்தான் தொலைத்து வந்தேன்
மீண்டும் உயிர் பிழைத்து வந்தேன்
உன்வசம் உள்ளதை இல்லையென்றாய்
என் காதலை வாங்கிய பின்னே...
இல்லையில்லை பொய்யென்றாய்
போடா பொறுக்கியென்றாய்
இத்தனைக்கும் வாடி நின்றேன்
கடைசியில் தானே போடி யென்றேன்
என்னுணர்வுகள் தின்ற பெண்ணே
நெஞ்சம் பதைக்கவில்லையா?
ஓரக்கண்ணால் பார்த்தாய் அறியாமல்
முழுப் படமாய் போனேனே
இன்று நிழற்படமாய் ஆனேனே
காற்றோடு வாழ்கிறேன்
உனை தொட்டுச் செல்கிறேன்
என் வாசம் புரிகிறதா உன்வசம்
உருவமில்லா உவமையானேன்
காதலர்களே காதலிக்கு(ம்) முன்னேயும்
கவனமாயிருங்கள் காதலுக்கு பின்னேயும்..

தூக்கம் திருடி விட்டாய்..


தூக்கத்தை திருடிக்கொண்டு
இனிய கனவுக்கு வாழ்த்திவிட்டு
விடை பெறுகிறாய்..
தூக்கத்தை தொலைத்த பிறகு
எங்கிருந்து வரும் கனவு..??
இமைகள் மட்டும்
இல்லாதிருந்தால்
உன் விழிவீச்சின்
தொடர் தாக்குதலில்
எத்தனை பேர்
இறந்திருப்பார்களோ..!!
ஊடல் காலங்களில்
கருக்கொண்ட முத்தங்களே
கூடலில் அதி வேகமாய்
பிரசவிக்கப்படுகிறது...
ஒவ்வொருவர் பிறந்த நாளிலும்
ஒரு நட்சத்திரம் தோன்றுமாம்..
நீ பிரிந்த அன்று
ஒரு நட்சத்திரம்
உதிர்ந்து விழுந்த வினாடியில் தான்
அதை நம்பத்தொடங்கினேன் நான்..!!!
உயிர் பிரியும் வேதனையை
என்னால் எளிதாய்
எடுத்துக்கொள்ள முடியும்...
ஒவ்வொரு முறை
நீ என்னை விட்டு
பிரியும் போதெல்லாம்
ஒத்திகை நடந்திருப்பதால்.. !!!

குட்டிக் கவிதைகள்


கோபம்
அழகான அவளுக்கு
வரவில்லையே காதல்
என்மீது
பொறுமை
என்னைத் தீண்டிய காதல்
உன்னையும் தீண்டும் ஒருநாள்
ஏக்கம்
விட்டில் பூச்சிகளுக்காக
விளக்கணைத்தாய்
எனக்குள் பற்றிக்கொண்ட
தீயை என்றணைப்பாய்
நீண்ட இரவு
விடிந்ததும் உன் முகம் பார்க்கலாம்
விழித்து விழித்துப் பார்கிறேன்
விடியவில்லையே இன்னும்..